Web Analytics Made Easy -
StatCounter

தமிழகம் முழுவதும் நீர்நிலைகள் உள்ளிட்ட அரசு நிலங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற புதிய குழுக்கள் – தமிழக அரசு உத்தரவு !

தமிழகம் முழுவதும் நீர்நிலைகள் உள்ளிட்ட அரசு நிலங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்றுவது, கண்காணிப்பது தொடர்பாக, பல்வேறு குழுக்களை அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ள வருவாய் துறை வெளியிட்ட அரசாணை விவரம்

அரசு நிலங்களில் குறிப்பாக நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவது தொடர்பாகவும், நிலங்களை பாதுகாப்பது தொடர்பாகவும், நீதிமன்ற உத்தரவுகளின்படி தாலுகா, மண்டல, மாவட்ட, மாநில அளவில் அவ்வப்போது குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

குறிப்பாக, 1997-98 ஆண்டில், மாவட்ட ஆட்சியர் தலைமையில் மாவட்ட அளவிலான வழிகாட்டுதல் குழு அமைக்கப்பட்டது. பிறகு,2002-ல் உயர் நீதிமன்ற உத்தரவுப்படி, வருவாய் துறை அமைச்சர் தலைமையில் உயர்நிலைக் குழுஅமைக்கப்பட்டது. தொடர்ந்து உயர் நீதிமன்ற உத்தரவின்படி, 3 வகையான குறைதீர்த்தல் குழுக்கள் அமைக்கப்பட்டிருந்தன.

அதன் பிறகு 2016-ல் பொதுப்பணித் துறையின் நீர்வளத் துறைஅதிகாரிகள் அடங்கிய குழு அமைக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து 2019-ல், சென்னை உயர் நீதிமன்றத்தின் அறிவுறுத்தல்படி அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் அரசு வெளியிட்ட உத்தரவின்படி, உள்ளூர் அளவில், உதவிபொறியாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், பஞ்சாயத்து தலைவர்கள், உள்ளூர் தன்னார்வலர்கள், சுய உதவிக் குழு உறுப்பினர்கள் என குளம் பாதுகாப்பு குழுக்கள் அமைக்கப்பட்டன.

இந்நிலையில், தமிழகத்தில் உள்ள நீர்நிலைகள் மற்றும் இதரஅரசு நிலங்களின் ஆக்கிரமிப்புகளை தடுக்கும் வகையில் ஒருமுனை கண்காணிப்பு திட்டம் அவசியம் என்பதை கருத்தில் கொண்டு, ஏற்கெனவே உள்ள குழுக்கள் ரத்து செய்யப்பட்டு, 3 வகையான புதிய குழுக்கள்கோட்டம், மாவட்ட, மாநில அளவில்அமைக்கப்படுகிறது.

கோட்ட அளவிலான குழு வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் அமைக்கப்படுகிறது. இக்குழுவில், அந்த பகுதியின் காவல் துணைகண்காணிப்பாளர், நகராட்சி ஆணையர்கள், அனைத்து வட்டாட்சியர்கள், நீர்வளத் துறையின்உட்கோட்ட அதிகாரி, நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர், ஊரக வளர்ச்சி மண்டல அதிகாரி, நில அளவை கோட்ட கண்காணிப்பாளர், தலைவரால் பரிந்துரைக்கப்படும் இதர அலுவலர்கள் இருப்பார்கள். கோட்ட அளவிலான குழுவானது, தாலுகா அளவில் ஆட்சேபகரமான, ஆட்சேபம் இல்லாத பகுதிகளில் உள்ளஆக்கிரமிப்புகளை கண்காணித்தல், அதற்கு எதிராக நடவடிக்கை எடுத்தல் உள்ளிட்ட பணிகள், இடங்களை கண்டறிதல் ஆகிய பணிகளை மேற்கொள்ளும். இக்குழு மாதம் ஒருமுறை கூடி முடிவுகளை எடுக்கும்.

மாவட்ட ஆட்சியர் தலைமையில் மாவட்ட அளவிலான குழுசெயல்படும். இக்குழுவில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர், மாநகராட்சியாக இருந்தால் காவல் ஆணையர், மாநகராட்சி ஆணையர், நீர்வளத் துறை செயற்பொறியாளர், நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர், ஊரக வளர்ச்சித் துறை இணை இயக்குநர், நகர ஊரமைப்புத் துறை உதவி இயக்குநர், நில அளவை உதவி இயக்குநர், அனைத்து வருவாய் கோட்டாட்சியர்கள் உறுப்பினர்களாக இருப்பார்கள். இக்குழு மாவட்ட அளவில் ஆக்கிரமிப்புகளை அகற்றுதல் உள்ளிட்டவை தொடர்பாக திட்டமிடல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளும்.

தலைமைச் செயலர் தலைமையில் மாநில அளவிலான குழு செயல்படும். இக்குழுவில், வருவாய், நகராட்சி நிர்வாகம், நீர்வள ஆதாரம், நெடுஞ்சாலை, ஊரக வளர்ச்சி, உள்துறை, வீட்டுவசதித் துறை செயலர்கள், டிஜிபி, ஊரக வளர்ச்சித் துறை இயக்குநர், சென்னை மாநகராட்சி ஆணையர், நகராட்சி நிர்வாக இயக்குநர், நீர்வள ஆதாரத் துறை தலைமை பொறியாளர், நெடுஞ்சாலைத் துறை தலைமை இயக்குநர், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய மேலாண் இயக்குநர், நில அளவை இயக்குநர் ஆகியோர் உறுப்பினர்களாக இருப்பார்கள். குழுவுக்கு ஒருங்கிணைப்பாளராக நில நிர்வாக ஆணையர் இருப்பார். இந்த குழுவானது ஆக்கிரமிப்புகள் அகற்றுவது தொடர்பான அனைத்து விதமான கண்காணிப்பு பணிகளையும் மேற்கொள்ளும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *