Web Analytics Made Easy -
StatCounter

தலை நிமிர்ந்த கலசபாக்கம் அத்திமல்லன் கல்வெட்டு

கலசபாக்கத்தை ஒட்டி ஓடுகிற செய்யாற்றின் வடகரையில் 2 ஆண்டுகளுக்கு முன்பு பள்ளம் எடுக்கும் போது சுமார் 8 அடிநீளமுள்ள ஒரு பலகைக்கல் கிடைக்கிறது. இந்த பலகைக்கல் முழுவதும் எழுத்துக்கள் இருப்பதாக தகவல் அறிந்த அவ்வூரைச் சேர்ந்த இராஜேந்திரன், இத்தகவலை வேலூரிலிருக்கும் கல்வெட்டு அறிஞர் அர.பூங்குன்றன் அவர்களுக்கு தகவல் கொடுக்க அவர் வந்த பார்த்து படித்த பின்பு தான் தெரிந்தது இக்கல்வெட்டு 10 ஆம் நூற்றாண்டைச் சேர்த்து என்றும் இதில் அத்திமல்லன் என்கிற பிரிதிவிகங்கரையரைப்பற்றிய அரிய செய்திகள் உள்ளன என்றும் தெரியவந்தது.

இக்கல்வெட்டில் முதல் 41 வரிகள் வடமொழியில் கிரந்த எழுத்துக்களாலும் 42 முதல் 61 வரி வரை தமிழ் எழுத்துக்களாலும் பொறிக்கப்பட்டுள்ளது. இந்த கல்வெட்டை தலைசிறந்த தொல்லியல் அறிஞர் ஒய். சுப்புராயலு அவர்களாலும் படித்து இதைப்பற்றி விரிவான கட்டுரையை ஆவணம் 28 வது இதழில் எழுதியுள்ளார். அதன்பிறகு இந்த கல்வெட்டு கலசபாக்கம் வருவாய் ஆய்வாளர் குடியிருப்பில் மக்கள் உட்காரவும் மனு எழுதவும் தோதான பென்ச் போல் பயன்படுத்தப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு சேங்கப்புத்தேரி கல்வெட்டு ஆய்விற்கு சென்று விட்டு வரும்போது, இந்த கல்வெட்டும் பார்த்தேன். அதை நான் பார்த்த போதே, வட்டாட்சியரிடம் அக்கல்வெட்டை எடுத்து அருகில் உள்ள வட்டாட்சியர் அலுவலகத்தின் முகப்பில் வைக்க சொல்லி வந்துவிட்டேன்.

பல்வேறு காரணங்களால் நின்று போன அப்பணி மீண்டும் உள்ளூர் மக்களும் அதே கோரிக்கை வைக்க இந்த முறை சாத்தியமானது. மீண்டும் இது பற்றி கலசாபக்கம் வட்டாட்சியர் திருமதி. இர. இராஜராஜேஸ்வரியிடம் தெரிவிது விரைவில் இக்கல்வெட்டை கலசபாக்கம் வட்டாட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் பார்வைக்கு தெரியும் வண்ணம் வைக்குமாறு கேட்டுக்கொண்டேன்.

உடனே நடவடிக்கை எடுத்து அக்கல்வெட்டை பொதுமக்கள் பார்க்கும் வண்ணம் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் வடக்கு பகுதியில் வைத்துவிட்டார். கல்வெட்டு வைத்தாகிவிட்டது. அதில் உள்ள தகவல் எவ்வாறு பொதுமக்களுக்கு தெரியப்படுத்துவது என்று யோசிக்கும்போது நண்பரும் வட்டாட்சியருமான வேணுகோபால் உதவியுடன செய்யாறு மருதம் கேப்பிடல்ஸ் நிறுவனம் நிதிஉதவி வழங்க அழகான ஏ.சி.பி. பலகையில் கல்வெட்டு பற்றிய சுருக்கமும் வரலாறும் எழுதி அந்த கல்வெட்டின் பின்னே வைக்கப்பட்டது. திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவம் முன்னெடுத்த செயல்களில் இதுவும் குறிப்பிடத்தக்க ஒன்று. உதவிய அனைவருக்கும் நன்றியும் பாராட்டுகளும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *