Web Analytics Made Easy -
StatCounter

கலசபாக்கம் பகுதியில் புதிய கல்வெட்டுகள் கண்டெடுப்பு!

திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவத்தின் ச.பாலமுருகன், சி.பழனிசாமி, ஜெ.சிவா, நலன் சக்கரவர்த்தி, கவுன்சிலர் கண்ணன் ஆகியோர்கள் மேற்கொண்ட ஆய்வில் கலசபாக்கம் வட்டத்தில் வீரளூர், கடலாடி, மேல்சோழங்குப்பம், ஆதமங்கலம்  கிராமங்களில் 10 ஆம் நூற்றாண்டு முதல் 17 ஆம் நூற்றாண்டு வரையான 4 கல்வெட்டுகள் கண்டறியப்பட்டன.

கடலாடி கிராமத்தில் சாலையருகே உள்ள ஏரியில் பலகைக்கல்லில் 13 வரிகளில் இராஷ்டிரகூட மன்னன் கன்னரதேவனின் கல்வெட்டு ஒன்று கண்டறியப்பட்டது. இக்கல்வெட்டை படித்தளித்த கல்வெட்டு அறிஞர் சு. ராஜகோபால் அவர்கள், இக்கல்வெட்டு கன்னரதேவனின் இருபதாவது ஆட்சியாண்டில் வெட்டப்பட்டது என்றும் தற்போதைய செஞ்சி பகுதியான குறிக்கும் சிங்கபுர நாட்டு மீவழியில் (பெருவழி) தாயனூர் என்ற ஊரைச்சேர்ந்த சிற்றையன் மன்றையன் என்பவர் பல்குன்றக் கோட்டத்தில் காந்தளுர் கூற்றத்து புதனாட்பாடி நாட்டு கடலாடி என்ற ஊரில் உள்ள ஏரியைப் பராமரிப்பதற்காக ஏரிப்பட்டியாக நிலம் தானம் அளித்ததை குறிப்பிடுகிறது. ஏரிப்பட்டி என்பது ஏரி போன்ற நீர்நிலைகளை பராமரிக்க அளிக்கும் மானியம் ஆகும் என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், கலசபாக்கம் அடுத்த வீரளுரில் இருந்த பாழடைந்த கோயில்  அதிட்டானத்தில் உள்ள கல்வெட்டு ஒன்று 24 அடி நஞ்சை நிலத்தின் அளவைக்குறிக்கும் வகையில் அமைந்துள்ளது. மேல்சொழங்குப்பம் கிராமத்தில் உள்ள கோயிலில் மண்டபத்தைக் உள்ள 17 ஆம் நூற்றாண்டு எழுத்தமைதி உள்ள தூண் கல்வெட்டில் தொண்டவ செட்டியின் மகன் பெத்த செட்டி என்பவர் மண்டபம் கட்டி தொடர்ந்து சேவை செய்து வந்தார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆதமங்கலம் அடுத்த தாதாபாளையத்தில் மணிமோசிஅய்யர் என்பவரின் தர்மச்செயல்களை பற்றி பலகைக்கல்வெட்டு குறிப்பிடுகிறது. கலசபாக்கம் பகுதியில் தொடர்ந்து கிடைத்த இக்கல்வெட்டுகள் மூலம் அப்பகுதியில் நிலவிய அரசியல், அறப்பணிகள் பற்றிய புதிய செய்திகள் தெரியவந்துள்ளன என்றும் அரசு இவற்றை ஆவணப்படுத்த வேண்டும் என்றும் வரலாற்று ஆர்வலர்கள் கோருகின்றனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *