மாம்பாக்கம்
சப்த கரை கண்ட தலங்களில் மூன்றாவது தலம் இது. இங்குள்ள இறைவனின் பெயரும் “கரைகண்டீஸ்வரர்” தான். சோழ மன்னர்களால் கட்டப்பட்டது என இந்தக் கோவில் கல்வெட்டுகள் பறைசாற்றுகின்றன. மகாவிஷ்ணு அமுத கலசத்தை பூமிக்கு கொண்டு வந்து, அதையே சிவலிங்கமாக நினைத்து வழிபட்டார். அப்போது ஏற்பட்ட வெள்ளத்தில் கலசம் அடித்துச் செல்லப்பட்டு நிலைப்பட்ட இடம் “கலசபாக்கம்” என்றும், கலசத்தில் இருந்த மாவிலைகள் ஒதுங்கிய இடம் “மாம்பாக்கம்” என்றும், கலசத்தில் கட்டி இருந்த நூல் ஒதுங்கிய இடம் “பூண்டி” என்றும், கலசம் மீது வைக்கப்பட்ட தர்ப்பைப் புல் தங்கிய இடம் “பில்லூர்” என்றும் பெயர் பெற்றதாக தல வரலாறு சொல்கிறது. மாம்பாக்கத்தைச் சுற்றியே, கலசபாக்கம், பில்லூர், பூண்டி ஆகிய ஊர்கள் உள்ளன. போளூரில் இருந்து 19 கிலோமீட்டர் தொலைவில், இந்த ஆலயமானது அமைந்துள்ளது.


